கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவிலிருந்து கிள்ளான், ஜோஹான் செத்தியா வரையிலான 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட எல்.ஆர்.டி 3 (LRT3) ஷா ஆலாம் புதிய ரயில் வழித்தடம் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 16.63 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த புதிய ரயில் சேவை மற்றும் அதன் இணைப்புப் பேருந்துகளில் பொதுமக்கள் இன்று (ஜூன் 29) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அதிரடி சலுகையை அறிவித்தார்.
மொத்தம் 20 நிலையங்களைக் கொண்ட இந்த புதிய வழித்தடம், தினமும் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும் என்றும், முதலாண்டில் நாளொன்றுக்கு 67,000 பயணிகள் வரை இதனைப் பயன்படுத்துவர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக 40 இணைப்புப் பேருந்துகள், ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand) வேன்கள் மற்றும் 2,300 வாகன நிறுத்துமிடங்கள் (Parking Bays) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய ரயில் சேவை கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) பகுதியின் நெரிசலான சாலைப் போக்குவரத்துச் சுமையைக் குறைப்பதோடு, சொந்த வாகனப் பயன்பாட்டாளர்களைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்கும் எனப் போக்குவரத்து ஆர்வலர்கள் பெரிதும் நம்புகின்றனர்.



















