சாலையின் குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி; மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!

லிப்பிஸ் | மார்ச் 06, 2026 :

லிப்பிஸ், ஜாலான் லூபுக் கூலிட் (Jalan Lubuk Kulit) பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில், காட்டுப்பன்றி மோதியதில் 41 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை சுமார் 4:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்டெண்ட் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

உயிரிழந்த வான் பதுரசாமான் மஹ்மூட் (41), கம்போங் பாப்போங்கில் உள்ள தனது தாயார் வீட்டிலிருந்து, 15 கி.மீ தொலைவில் உள்ள கம்போங் லூபுக் கூலிட்டில் இருக்கும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் தனியாகச் சென்று கொண்டிருந்தார்.

ஒற்றைப் பாதையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு காட்டுப்பன்றி திடீரெனச் சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக லிப்பிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

விபத்துக்குப் பிறகு அந்தக் காட்டுப்பன்றி அருகில் இருந்த தோட்டத்திற்குள் ஓடி மறைந்துவிட்டது.

இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால், விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here