கோலாலம்பூர் :
கிழக்குக்கரை விரைவுச்சாலையின் (LPT) கிமீ 246.4-இல், ஜாபோர் (Jabor) டோல் சாவடிக்கு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூர விபத்தில் நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்தனர்; மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கில்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெமாமான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘யமஹா ஆர்எக்ஸ்இசட்’ (Yamaha RXZ) மோட்டார் சைக்கிள் குழுவும் (Convoy), கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேரிட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே சே முகமட் சுஃபியான் (40), முகமட் ஹஃபீஸ் அல் ஹகிம் (33) மற்றும் முகமட் ஐசாட் ஹுஸ்னி (33) ஆகிய மூவர் பலியாகினர். நான்காவது பலியான முகமட் சஃபாவாய் (24) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த 20 பேர் தற்போது தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனை (HTAA) மற்றும் சுல்தான் அகமட் ஷா (IIUM) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் காயமின்றி தப்பிய வேளையில், அதிலிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் காயமடைந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















