ஜோகூர் தேர்தல்: சிம்பாங் ரெங்காங்கில் தற்காலிக மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் வாக்களித்தார்!

குளுவாங்:

ஜோகூர் மாநிலத் தற்காலிக மந்திரி பெசாரும், மாநில பாரிசான் நேஷனல் (BN) தலைவருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி (Datuk Onn Hafiz Ghazi), இன்று காலை செக்கோலா கெபாங்சான் சிம்பாங் ரெங்காங் (Sekolah Kebangsaan Simpang Renggam) வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வெள்ளை நிற பாஜு மலாயு ஆடையில் காலை 8.06 மணியளவில் வந்திறங்கிய அவரை, தேர்தல் அதிகாரிகளும் ஆதரவாளர்களும் வரவேற்றனர். வாக்களிப்பதற்கு முன்னதாக அங்கிருந்த பிற வாக்காளர்களையும் அவர் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஓன் ஹஃபிஸ் இம்முறை பாக்காத்தான் ஹரப்பான் (PH) வேட்பாளர் நூர் ஹஃபிஸ் ரோஸ்லானை எதிர்த்து மாச்சாப் (Machap) சட்டமன்றத் தொகுதியில் நேருக்கு நேர் (Straight Fight) போட்டியிடுகிறார்.

கடந்த 2022 ஜோகூர் தேர்தலில் மாச்சாப் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு 11,029 வாக்குகளைப் பெற்று, 6,543 வாக்குகள் பெரும்பான்மையில் (Majority) அமோக வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பு அவர் 2018 பொதுத் தேர்தலில் லாயாங்-லாயாங் (Layang-Layang) சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது பிகேஆர் (PKR) வேட்பாளர் முருகன் முத்துசாமியை 364 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here