கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள அம்பாங்கான் அடுக்குமாடி குடியிருப்பு (Ampangan Flat) ஒன்றில், 40 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டதாகச் சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) முகமட் யாத்திம் ஒஸ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியிலிருந்து கடந்த சனிக்கிழமை கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் (JBPM) உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் இப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பெண் உயிரிழந்து சுமார் ஐந்து முதல் ஆறு நாட்கள் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததும், சில உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் எவ்விதப் போராட்ட அறிகுறிகளோ அல்லது சந்தேகத்திற்குரிய குற்றவியல் கூறுகளோ (Criminal elements) காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகளால் மரணம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அந்தப் பெண்ணின் உடல் ரெம்பாவ் மருத்துவமனையின் (Hospital Rembau) தடயவியல் துறைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திடீர் மரணம் (SDR – Sudden Death Report) என வகைப்படுத்தப்பட்டுப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



















