பாலத்தின் கீழ் சிக்கிய சிமெண்ட் கலவை லோரி; உயரக் கட்டுப்பாட்டு அளவீடு குறித்துச் சமூக ஊடகங்களில் கடும் விவாதம்!

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த உயரக் கட்டுப்பாட்டுத் தடுப்பில் (Height-restriction barrier) சிமெண்ட் கலவை லோரி (Cement mixer) ஒன்று மோதி சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

‘டேஷ்கேம் மலேசியா’ (DashCam Malaysia) என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தத் டேஷ்கேம் காட்சி, இன்று (ஜூலை 14) மதியம் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. எனினும், இவ்விபத்து துல்லியமாக எந்த இடத்தில் நடந்தது என்ற விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த உயரக் கட்டுப்பாட்டு எச்சரிக்கைப் பலகையின் அளவீடு தவறாக இருந்திருக்கலாம் என ‘பைசால் முஸ்தபா’ என்ற பயனர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற உயரமுடைய லோரிகள் இதற்கு முன்பு எவ்விதப் பிரச்சினையுமின்றி இப்பகுதியைக் கடந்து சென்றுள்ளதாக மற்றொரு பயனர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த ‘சிங்மோக்யென்’ என்ற பயனர், முந்தைய விபத்து ஒன்றின் காரணமாக அந்த உயரக் கட்டுப்பாட்டுத் தடுப்பு வளைந்து சேதமடைந்திருந்ததே லோரி சிக்கியதற்குக் காரணம் எனத் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இவ்விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) ஊடகம், பொதுப்பணி அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைக் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here