பூரி ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசல்: ஒருவர் பலி, 120 பேர் காயம்

பூரி, ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரையைக் காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டின் ரத யாத்திரையானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்கியுள்ளனர்ள். தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும். இந்த திருவிழா 24-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.

ரத யாத்திரையை முன்னிட்டு ஒடிசா நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், ரத யாத்திரையின்போது, ​​பூரியின் ‘படா தண்டா சாலை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிக்கினர். 120 பேர் காயமடைந்தனர். நெரிசலால் பக்தர்கள் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ரத யாத்திரையின்போது நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here