மலாக்கா மாநில அரசிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது பக்காத்தான் ஹராப்பான்

(ரெ.மாலினி)

மலாக்கா:

லாக்கா பக்காத்தான் ஹராப்பான் மாநில சட்டமன்றத்தில் நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியை உருவாக்கும் மாநில அரசியலமைப்புத் திருத்த மசோதாவை எதிர்த்ததைத் தொடர்ந்து, மாநில அரசின் நிர்வாகத்திலிருந்து விலகும் இறுதி முடிவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலாக்கா பி.எச் தலைவர் அட்லி சஹாரி, பிகே ஆர் இடைக்கால மாநிலத் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம், மலாக்கா டிஏ பி. தலைவர் கூ போய் தியோங் மற்றும் அமனா மாநிலத் தலைவர் டத்தோ அஷ்ராஃப் முக்லிஸ் மிங்காட் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அனைத்து பிச் சட்டமன்ற உறுப்பினர்களும் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

அறிக்கையில், “மாநில அரசின் எந்தவொரு தீர்மானத்தையும் இனி ஆதரிக்காத நிலையில், ஆட்சிக்குழு உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மாநில அரசின் சலுகைகளையும் வசதிகளையும் தொடர்ந்து பெறுவது ஜனநாயகக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது. எனவே மாநில அரசிலிருந்து விலகுவது சரியான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பக்காத்தானைச் சேர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும்,கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் பதவிகளில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமுகமான பொறுப்புமாற்றத்திற்காக அந்த ராஜினாமா ஜூலை 31 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாநில முதல்வர், மாநில அரசு மற்றும் அரசு ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு பி எச் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

மக்கள் வழங்கிய ஆணைக்காலம் நிறைவடையும் வரை, அரசியல் வேறுபாடின்றி மலாக்கா மக்களுக்கான சேவையை பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியை உருவாக்கும் மாநில அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ப க்காத்தானைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here