வீட்டின் மீது விழுந்த இராட்சத மரம்; பெண், 2 சிறுமிகள் படுகாயம்!

கோலாலம்பூர்:

சபா, சண்டாக்கான் அருகே உள்ள கம்போங் கும்-கும் கெச்சில், பத்து 16 (Kampung Gum-Gum Kecil, Batu 16) பகுதியில் நேற்று (ஜூலை 16) இரவு வீட்டின் மீது ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், 47 வயதுப் பெண்ணும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய இரு சிறுமிகளும் படுகாயமடைந்தனர்.

நேற்று இரவு 10.04 மணியளவில் இக்கோர விபத்து குறித்துத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகச் சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தகவலையடுத்து, சண்டாக்கான் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் இரவு 10.31 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த இராட்சத மரம் வீட்டின் சமையலறைப் பகுதியின் மீது பயங்கரமாக விழுந்தது. இதில் வீட்டின் 40 விழுக்காடு கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்தது. மரம் விழுந்த வேளையில் வீட்டிற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர்.

இந்த விபத்தில் முஹைனி அவாங் (47), டாயாங் டாப்னே டானிஷா டெரன்ஸ் (11) மற்றும் அவரது உறவினரான டாயாங் அஸ்வென்னா அகிலா ஹாசிஸ் (11) ஆகியோர் காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பொதுமக்கள் உதவியுடன் மூவரும் மீட்கப்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 6 தீயணைப்பு வீரர்கள், மின்சார வாள்களைப் (Chainsaws) பயன்படுத்தி வீட்டின் மீது விழுந்த மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வேறு ஏதேனும் ஆபத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யும் சோதனைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். நேற்று இரவு தொடங்கிய இந்த மீட்பு மற்றும் தூய்மைப் பணிகள் இன்று (ஜூலை 17) காலை 9.10 மணியளவில்தான் முழுமையாக நிறைவடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here