(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வரும் நெட்வொர்க் ஸ்கூல் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட முதல் அறிக்கையைத் தொடர்ந்து, மாநில அரசின் உத்தரவின்படி ஜோகூர் இஸ்கந்தர் புத்ரி மாநகராட்சி கழகம் தனது அதிகார வரம்பிற்குள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
வெளிநாட்டினரின் மலேசிய நுழைவு, அவர்களின் குடியேற்ற நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களும் உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதை மாநில அரசு மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களின் நிலை மற்றும் நெட்வொர்க் ஸ்கூல் செயல்பாடு குறித்து மத்திய அரசு விரைவாக, தெளிவான மற்றும் இறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசின் அதிகார வரம்பிற்குள், ஜோகூர் இஸ்கந்தர் புத்ரி மாநகராட்சி கழகம் வணிக உரிமம், கட்டிடப் பயன்பாடு மற்றும் விளம்பரப் பலகை விதிமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த ஆய்வில், நிறுவனம் இரண்டு வளாகங்களில் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் ஒரு வளாகம் செல்லுபடியாகும் அலுவலக உரிமத்துடன் செயல்பட்டு வந்தாலும், மற்றொரு வளாகம் உள்ளூர் குடிமகனுக்குச் சொந்தமானதாக இருந்த போதிலும், ஜோகூர் இஸ்கந்தர் புத்ரி மாநகராட்சி கழகத்தின் வணிக உரிமம் இன்றி இயங்கியதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
l
மேலும், அலுவலகப் பயன்பாட்டிற்கே அனுமதிக்கப்பட்ட வளாகம் வகுப்பறையாகப் பயன்படுத்தப்பட்டதோடு, முழுமையான அனுமதி பெறப்படாத வணிக விளம்பர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, உரிய வணிக உரிமம் இன்றி செயல்பட்ட வளாகத்திற்கு வணிக நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு வழங்கப்பட்டதுடன், அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு முரணாக விளம்பரப் பலகை காட்சிப்படுத்தப்பட்டதால், உள்ளூராட்சி சட்டம் 1976-இன் பிரிவு 107(2)-ன் கீழ் விளம்பர உரிமம் தொடர்பான அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து அம்சங்களிலும் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், சட்டம், உரிம நிபந்தனைகள் அல்லது நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், சட்டத்தின் அடிப்படையில் மேலதிக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.



















