LINDUNG 24 Jam: வழங்கப்படும் போது மறுக்கப்பட்டு, துயரம் தாக்கும் போது தேடப்படுகிறது

எழுத்து: டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் அஸிஸ் முகம்மட் (பெர்கேசோ குழுமம் தலைமைச் செயல் அதிகாரி)

கிழக்குக் கரை விரைவுச்சாலை (LPT) மீண்டும் ஒருமுறை துயரச் சம்பவத்தின் களமாக மாறியுள்ளது; மோட்டார் சைக்கிள் பாகங்கள் சிதறிக்கிடக்க, உடல்கள் விழுந்த இடங்களிலேயே அசைவற்று கிடந்தன.

டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் அஸிஸ் முகம்மட்

கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்து, சம்பவ இடத்திலேயே மூன்று உயிர்களைப் பறித்தது. நான்காவது மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்தது, மேலும் 13 பேர் பல்வேறு அளவிலான கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சோகச் செய்தி சமூக ஊடகப் பக்கங்களிலும் நாளிதழ்களிலும் பரவியதைத் தொடர்ந்து, அலட்சியம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது குறித்த விவாதங்கள் பலமாக எழுந்தன.

இணைய ஊடகங்கள், இணைய வெளி நீதிபதிகளாக மாறி இந்த விபத்திற்கு யார் காரணம் என்று விரல் நீட்டி குற்றம் சாட்டுவதில் அவசரம் காட்டின.

பிற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பொறுப்பற்ற செயலும், சட்டத்தின்படிதான் கையாளப்பட வேண்டும் என்பதில் பெர்கேசோவுக்கு (PERKESO) மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும், இந்த பொது விமர்சனங்களின் சலசலப்புகளுக்குப் பின்னால், மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற ஒரு வேதனையான உண்மை மறைந்துள்ளது. இந்த நான்கு மரணங்கள், ஒன்று முதல் 13 வயதுக்குட்பட்ட எட்டு பிள்ளைகளை ஒரே இரவில் தந்தையற்றவர்களாக ஆக்கியுள்ளன.

தங்களின் குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கும் சுமை, இப்போது அவர்கள் தேர்ந்தெடுக்காத சூழ்நிலைகளால் தனித்து வாழும் தாய்மார்களாக மாறியுள்ள பெண்களின் தோள்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது.

இறந்த தந்தையர்கள் காட்டிய ஈடு செய்ய முடியாத அன்புக் கடனுக்கு அப்பாற்பட்டு, இந்தப் பிள்ளைகளை தொடர்ந்து வளர்த்து ஆளாக்க வேண்டும் மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அவர்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்வதற்கு பால் வாங்க வேண்டும், வாடகை செலுத்த வேண்டும், மழலையர் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும், வளர வளர ஆடைகளை மாற்ற வேண்டும், மிக முக்கியமாக சத்தான உணவை மேஜையில் வைக்க வேண்டும்.

வரவிருக்கும் ஆண்டுகளில், அந்தச் சின்னஞ்சிறு பாதங்கள் அவர்களை இளமை, பதின்ம பருவத்திற்கும் முதிர் பருவத்திற்கும் இட்டுச் செல்லும்போது, கல்விக்கான செலவு தொடர்ந்து உயரும்.

ஆனால், அவர்களுக்காக அயராது உழைத்த அப்பாக்கள் இனி வரப்போவதில்லை. இதுபோன்ற தருணங்களில்தான் சமூகப் பாதுகாப்பின் (Social Security) உண்மையான நோக்கம் வெளிப்படுகிறது; மேலும் மலேசியர்களிடையே சமூகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏன் கவலைக்குரியதாக உள்ளது என்பதும் புலனாகிறது.

வாழ்க்கையின் எதிர்பாராத அதிர்ச்சிகளைத் தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலை (Safety net), ஒருபோதும் தடுமாறாதவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி அல்ல. அல்லது அது ஒருவரின் மரணத்திற்குப் பின் வழங்கப்படும் பணம், காயத்திற்குப் பின் அளிக்கப்படும் சிகிச்சை அல்லது ஒருவரின் வருவாய் ஈட்டும் திறன் குறைந்தவுடன் வழங்கப்படும் ஓய்வூதியம் மட்டுமே அல்ல.

மாறாக, சமூகப் பாதுகாப்பு என்பது ஒற்றுமையின் எளிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது:

“ஆரோக்கியமானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களை ஆதரிக்கிறார்கள், துயரத்திலிருந்து தப்பியவர்கள் இழப்பைச் சந்தித்தவர்களுடன் நிற்கிறார்கள், இன்னும் இரு கால்களால் நிற்கக்கூடியவர்கள் ஓர் உறுப்பையோ அல்லது வேலை செய்யும் திறனையோ இழந்தவர்களுக்கு உதவுகிறார்கள்.”

ஒரு தனிநபரின் வாழ்க்கையின் கூரையை பேரிடர் தகர்க்க அச்சுறுத்தும்போது, அதன் கீழ் தஞ்சமடையும் குடும்பம், குறிப்பாகப் பாதுகாப்பைத் தேடும் குழந்தைகள், வறுமையில் வீழ்ந்து கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கான சமூகத்தின் உறுதிமொழி இதுவாகும்.

உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பங்களுக்கு, அந்த உறுதிமொழி இப்போது அவர்களின் பங்களிப்புப் பதிவுகளின் (Contribution records) அடிப்படையில் மாதாந்திர ‘சார்ந்திருப்போர் ஓய்வூதியமாக’ (Survivors’ Pension) வடிவம் பெற்றிருக்கிறது.

மறைந்த சே முகமட் சுஃபியன் சே கனியின் குடும்பம் மாதம் RM2,207.63, மறைந்த முஹம்மது ஹஃபீஸ் அல் ஹக்கிம் மஸ்லானின் குடும்பம் மாதம் RM1,258.33 மேலும் மறைந்த முகமட் ஐசாட் ஹுஸ்னியின் குடும்பம் மாதம் RM708.33 பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

வகுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ், இந்த மூன்று விதவைகளும் முறையே மாதம் RM1,325, RM755 மற்றும் RM425 ஆகிய தங்களின் பங்குகளிலான ஓய்வூதியத்தை வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள். 30 ஆண்டுகால அடிப்படையில் கணக்கிட்டால், இந்த பலன்களின் மதிப்பு முறையே RM477,000, RM271,800, RM153,000 ஆகும்.

மேலும், எட்டு குழந்தைகளின் வளர்ப்புச் செலவிற்காக ஒட்டுமொத்தமாக மாதம் RM1,670 ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் அடிப்படையில் இது செலுத்தப்பட்டால், அவர்களின் வளர்ப்புச் செலவிற்காக RM300,600 வழங்கப்படும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பெர்கேசோவின் நீண்டகாலப் பலன்கள் RM1.2 மில்லியனைத் தாண்டுகின்றது.

வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தபோது சிறிய தொகையாகக் கருதப்பட்ட இந்த மாதாந்திரப் பிடித்தங்கள், இப்போது நிலையான பாதுகாப்பு நீரோட்டமாகத் திரும்புகின்றன.

சமூகப் பாதுகாப்பு என்பது தற்காலிக நிவாரணம் அல்ல, மாறாக இழப்பின் விளைவுகளைக் குடும்பங்கள் தனித்துச் சுமக்காமல் இருப்பதை உறுதி செய்யும் தொடர்ச்சியான பொறுப்பு என்பதற்கு இதுவே சான்றாகும்.

விபத்திலிருந்து தப்பியவர்களைப் பொறுத்தவரை, ‘லிண்டுங் 24 ஜாம்’ (LINDUNG 24 Jam) திட்டம் அவர்களின் கதையை மற்றொரு முக்கியமான வழியில் மாற்றுகிறது. காயமடைந்த 13 பேரில் பாதிக்கப்பட்ட ஐவர் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த 2026 ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்னதாக, ஜாபோர் (Jabor) சந்திப்பிற்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சட்ட ரீதியாக பெர்கேசோவினால் அங்கீகரிக்க முடியாத விண்ணப்பங்களின் புள்ளிவிவரங்களாக மட்டுமே மாறியிருக்கக்கூடும். உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தாலும், சட்டம் அதன் கைகளைக் கட்டியிருந்தது.

அந்தக் கட்டுப்பாடு இப்போது நீக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் இப்போது உதவ முடியும்; அதன் முதற்கட்டமாக, இரண்டு பயனாளிகளின் அறுவை சிகிச்சை மேலும் செயற்கை உட்பொருத்து/இம்பிளான்ட் (Implants) செலவுக்காக RM10,000 தொகையை பெர்கேசோ அங்கீகரித்துள்ளது.

விபத்தில் சிக்கிய ஐந்து பேரும் தங்களின் மருத்துவ விடுப்பு காலம் முழுவதும், அதாவது அவர்களால் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியாத காலம் வரை, மாற்று வருமான பலனைப் (Income replacement) பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அமாட் இர்வான் கைருல் அஸ்ஹாவின் குடும்ப வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த பலன் உதவுகிறது; குறிப்பாக, ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி தங்களின் இரண்டாவது குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் இது மிக முக்கியமானது.

இங்குதான் சமூகப் பாதுகாப்பு என்பது சந்தையில் கிடைக்கும் தனிநபர் காப்பீட்டுப் பாதுகாப்பில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. மாற்று வருமானம் என்பது வெறும் பணப் பட்டுவாடா அல்ல. ஒரு குடும்பத்திற்கு மிகவும் தேவைப்படும் பட்சத்தில், குடும்பத் தலைவரின் மாதாந்திர வருமானம் திடீரென மறைந்துவிடுவதைத் தடுக்கும் ஒரு உயிர்நாடி.

ஐந்து வயதுக் குழந்தையுடனும், பிறக்கவிருக்கும் மற்றொரு குழந்தையுடனும் இருக்கும் அந்தக் குடும்பத்திற்கு, ‘லிண்டுங் 24 ஜாம்’ மூலம் வழங்கப்படும் ‘தற்காலிக செயல் இழப்பு பலன்’ (Temporary Disablement Benefit) என்பது முதற்கட்டப் பாதுகாப்பு மட்டுமே. மருத்துவ வாரியத்தின் மதிப்பீட்டைப் பொறுத்து, இது ‘நிரந்தர செயல் இழப்பு பலனாக’ (Permanent Disablement Benefit) தொடரக்கூடும்.

இருப்பினும், அமாட் இர்வானுக்கான பாதுகாப்பு மாற்று வருமானம் அல்லது நிதி பலன்களுடன் முடிந்துவிடுவதில்லை. அவர் தனது சுயசார்பை மீண்டும் பெறவும், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், குடும்பத் தலைவராகத் தனது பொறுப்புகளை மீண்டும் தொடங்கவும் ஒரு நீண்ட, கடினமான மீட்புப் பாதை அவருக்கு முன்னால் உள்ளது.

சுல்தான் நஸ்ரின் ஷா பெர்கேசோ புனர்வாழ்வு மையத்தில் (PERKESO Rehabilitation Centre Sultan Nazrin Shah), சுமார் RM100,000-க்கும் அதிகமான மதிப்புடைய புனர்வாழ்வுச் செலவுகள் முழுமையாகப் பெர்கேசோவினால் ஏற்கப்படும். இதுவே சமூகப் பாதுகாப்பின் உண்மையான வடிவம்: வெறும் இழப்பீட்டை ஒதுக்குவதோ அல்லது ஒருவர் முடங்கிக் கிடக்கும்போது அவரைத் தாங்குவதோ அல்ல, மாறாக அவர் மீண்டும் சுயசார்பு பெற்று, தனது அன்புக்குரியவர்களின் தூணாக மாறும் வரையிலான கடினமான பயணத்தில் அவருக்குப் பாதுகாப்பளிப்பதாகும்.

வாழ்க்கை எப்போதும் தெளிவான வானத்தின் கீழ் அமைவதில்லை. ஆயினும், அமாட் இர்வான்,விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவரான முகமட் ரோஸ்லி ஜலாலுடின் ஆகியோரின் ஐந்து இளம் குழந்தைகளின் எதிர்காலம், பெர்கேசோவின் கல்விக்கடன் பலன் (Education loan benefit) மூலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அவர்களின் குடும்பங்கள் வாழ்க்கையின் மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்ட போதிலும், ‘லிண்டுங் 24 ஜாம்’ பங்களிப்பாளர்களின் குழந்தைகள் ஆதரவின்றி தவிக்க விடப்பட மாட்டார்கள்.

துரதிர்ஷ்டம் ஒருபோதும் வருவதற்கு முன் அனுமதி கேட்பதில்லை என்பதால், நீண்டகாலமாக இருந்து வந்த பாதுகாப்பு இடைவெளியை நிரப்புவதற்காகவே ‘லிண்டுங் 24 ஜாம்’ உருவாக்கப்பட்டது. அது இடத்தையோ நேரத்தையோ பார்ப்பதில்லை; எந்த நேரத்திலும் ஒருவரது வாழ்க்கையை அது தலைகீழாக மாற்றக்கூடும்.

இருப்பினும் மனித இயல்பு என்னவென்றால், தலையில் அடிபடும் வரை நாம் நிமிர்ந்து பார்ப்பதில்லை.

இந்தத் திட்டம் மலேசியாவை நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இணைத்து, பெரும்பாலான பிற நாடுகளில் இன்னும் கிடைக்காத விரிவான பாதுகாப்பை வழங்கிய போதிலும், ‘லிண்டுங் 24 ஜாம்’ சில தரப்பினரின் விவாதப் பொருளாகவும் ஏளனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

பல மக்கள் இன்று எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை மட்டுமே கணக்கிடுகிறார்களே தவிர, நாளை என்ன இழக்க நேரிடும் என்பதை கற்பனை செய்துகூட பார்ப்பதில்லை.

இத்திட்டத்திலிருந்து விலகுவது (Opting out) எளிதான முடிவாகத் தோன்றலாம். ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு முன், உங்கள் குழந்தைகளைப் பார்த்து நேர்மையாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: “இன்று இரவு நான் வீட்டிற்கு வராவிட்டால், அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? அவர்கள் சார்ந்து வாழ்ந்த மனிதனை இழந்த பிறகு, யார் மேஜையில் உணவை வைப்பார்கள், யார் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள், குடும்பத்தின் கண்ணியத்தை யார் காப்பார்கள்?”

ஜாபோர் சந்திப்பிற்கு அருகே நான்கு உயிர்கள் பறி போயின. ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற வீடுகளில் வாழ்க்கை தொடர வேண்டும். ஒரு குழந்தை ஒரு புகழ்பெற்ற ஹாக்கி கோல் காவலராக ஆக வேண்டும் என்ற கனவு, அவனது தந்தையின் உடலோடு புதைக்கப்படக் கூடாது.

பல ஆண்டுகளாக, சமூகப் பாதுகாப்பின் உதவிக்கரம் வேலை நேரம் மேலும் பணியிடத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

‘லிண்டுங் 24 ஜாம்’ அந்த எல்லைகளைத் தளர்த்தியுள்ளது; இதனால் வேலை நேரம் முடிந்த பிறகும் துயரம் தாக்கும் போது மக்களுக்கு உதவி சென்றடைய முடிகிறது.

நாம் விழும்போது நம்மைத் தாங்குவதற்காக நீட்டப்பட்ட கரத்தையே, அடிப்படை ஆதாரமற்ற புகார்களும் அச்சமூட்டும் வதந்திகளும் பொதுமக்களை முதலில் சென்றடைவதால் புறந்தள்ளுவதைப் பார்ப்பது இதயத்தை ரணமாக்குகிறது.

பாதுகாப்பின் மதிப்பை நமக்கு உணர்த்துவதற்குத் துயரமே வரும் வரை காத்திருக்க வேண்டாம். அந்தப் பாடம் நமக்குக் கிடைக்கும் போது, காலம் கடந்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here