முருக பக்தர்கள் அனைவரும் சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். சஷ்டி திதியில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட கஷ்டமும் தீரும் என சொல்லப்படுகிறது.
எண் 6 ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன் தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு.
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய புண்ணியத்தையும், நற்பலன்களையும் தரும் விரதம் ஆகும். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. சஷ்டி விரதம் இருந்தால் தீராத கஷ்டங்கள் தீரும். வறுமை நீங்கும் என சொல்லப்படுகிறது. சஷ்டி விரதம், குழந்தை வரம் பெறுவதற்காக மட்டும் தான் கடைபிடிப்பார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது நீங்கி, சுகமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பவர்கள் சஷ்டி விரதம் இருக்கலாம். ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் சஷ்டி விரதத்திற்கு இருக்கும் சிறப்புகள், இந்த விரதத்தால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என ஆன்மீகத்தில் திடமான நம்பிக்கை உள்ளது. சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாக தீராத நோய் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது என்பது பக்தர்களின் அனுபவமாக உள்ளது.
முருகப் பெருமான், ஞானத்தின் வடிவம் என்பதால் சஷ்டி திதியில் முருகனை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் தீரும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.





















