(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தல் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான தலைமைத்துவத்தின் மூலம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக ஜோகூர் மாநில ம.இ.கா, பாகோ தொகுதி தலைவர் கே.முனியாண்டி தெரிவித்தார்.
கடின உழைப்பு, மக்களின் குரலைக் கேட்டுச் செயல்படுதல், இன ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய அணுகுமுறைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
ஜோகூரில் உருவான இந்த மாற்றத்தின் உணர்வு ஜோகூருக்குள் மட்டுமே நின்றுவிடாமல், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கும் ஊக்கமாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
அதேவேளை, மக்களுக்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் அரசியல் மட்டுமே நீடித்த மக்கள் ஆதரவைப் பெறும் என்றும், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியச் சமூகத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்த ம.இ.கா. முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒற்றுமை, முன்னேற்றம், மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

















