சைபீரியா பூமியை தாக்கிய குறுங்கோளால் ஒரு வினாடியில் கோடிக்கணக்கான வைரங்கள் உருவான அதிசயம் நிகழ்ந்துள்ளது.
வைர சுரங்கம்
உலகின் மிக பெரிய வைர சுரங்கம் ரஷியாவில் உள்ள வடக்கு சைபீரியா என்ற பகுதியில் அமைந்துள்ளது. பாபிகை பள்ளம் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த வைர சுரங்கத்தின் உருவாக்கம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
சூரியனை சுற்றி வர கூடிய குறுங்கோள்களில் ஒன்று பூமியை தாக்கியதில் இந்த அதிசயம் ஏற்பட்டு உள்ளது. குறுங்கோள்கள் என்பது பாறைகளால் ஆன சிறிய விண்வெளி கற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 35.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (1 மில்லியன் என்பது 10 லட்சம்) 8 கி.மீ. அகலம் கொண்ட குறுங்கோள் ஒன்று பூமியை நோக்கி வந்துள்ளது. (சிலர் அதனை வால் நட்சத்திரம் என்றும் கூறுகின்றனர்).
அது பூமியை தாக்கியதில் 100 கி.மீ. விட்டம் கொண்ட பெரிய பள்ளம் உருவானது. அது தாக்கிய பகுதி பழமையான கிராபைட் படிவங்கள் செறிந்த பகுதியாகும். இதனால், அந்த குறுங்கோள் தாக்கியதும் அதிக அழுத்தம் ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான டிகிரி வெப்பநிலையும் அதிகரித்தது.
மெக்சிகோ
இது கிராபைட்டின் மூலக்கூறு வடிவமைப்பை அழுத்தியுள்ளது. இதனால், ஒரு சில வினாடிகளில் டிரில்லியன் கணக்கில் வைரங்கள் உருவாகி உள்ளன.
குறுங்கோள்கள் பூமியை தாக்குவது என்பது புதிதல்ல. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 10 கி.மீ. முதல் 15 கி.மீ. விட்டம் கொண்ட குறுங்கோள் ஒன்று பூமியை தாக்கியது. இதனால், தற்போது உள்ள மெக்சிகோ நாட்டின், யுகடான் தீபகற்பத்தில், 150 முதல் 300 கி.மீ. அகலம் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
டைனோசார்கள்
இந்த குறுங்கோள் மோதலால் நிலச்சரிவுகள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதனால் ஏற்பட்ட தூசு மற்றும் உருகிய பாறைகள் பூமியை சூழ்ந்தன. இதன் தொடர்ச்சியாக சூரிய ஒளி தடைப்பட்டது. இருள் சூழ்ந்தது. பல ஆண்டுகளாக குளிர்காலம் நீடித்தது.
இதனால், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளின் வாழ்வு பாதிக்கப்பட்டது. அமில மழை தொடர்ந்து பொழிந்து சமுத்திரங்கள் விஷம் நிறைந்த ஒன்றாக ஆனது. இதன் பாதிப்பால், பூமியில் அனைத்து உயிரினங்களிலும் 75 சதவீதம் அளவிற்கு அழிந்தன. பூமியின் மீது இந்த குறுங்கோள் மோதியதில் டைனோசார்கள் முற்றிலும் அழிந்து விட்டன.








