துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டது; நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே – ஜோகூர் மந்திரி பெசார்

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் 10 துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இந்த நியமனம் மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பிற்குள் சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், மாநில நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து தெரிவிக்கும் உரிமையை மாநில அரசு மதிப்பதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கில் மட்டும் பார்க்காமல், தற்போதைய நிர்வாகத் தேவைகள், சட்ட நிலை, மக்களின் நலன் ஆகிய அடிப்படைகளிலும் அணுக வேண்டும் என்றார்.

ஜோகூர் மாநில சட்ட ஆலோசகரின் அறிவுரையின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்த ஒன் ஹஃபிஸ் காஸி, துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ல என்றும், அவர்களுக்கு ஆட்சிக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் உரிமையோ, கொள்கை, நிதி, நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

மாநில அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் ஜோகூர் மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமே தொடர்ந்து இருப்பதாக அவர் கூறினார். எனவே, இந்த நியமனம் புதிய செயல் அதிகாரத்தை உருவாக்குவதோ, ஏற்கனவே உள்ள அதிகாரங்களை மாற்றுவதோ, மாநில அரசின் நிர்வாக அமைப்பை மாற்றியமைப்பதோ அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நடவடிக்கை மக்களால் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அரசின் கொள்கைகளை விரைவாக செயல்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காணவும் உருவாக்கப்பட்ட நிர்வாக ஆதரவு அமைப்பாகவே இதை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ, அரசின் நிர்வாகச் செலவினத்தை பெருக்குவதற்கோ இந்த நியமனம் செய்யப்படவில்லை என்றும், மாநில நிர்வாகத்தின் செயல்திறனை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

ஜோகூர் பொருளாதார மாற்றுத் திட்டம் (JETP), ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ), ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் (RTS Link) உள்ளிட்ட 2030-ஐ நோக்கிய பல்வேறு முக்கிய திட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், அவை மக்களுக்கு விரைவாகப் பயனளிக்கும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை என்றார்.

இந்த நியமனத்தால் மாநில அரசுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும், அரசின் தற்போதைய வசதிகள், கட்டமைப்புகள், சொத்துகளையே பயன்படுத்துவதால் புதிய துறைகளோ கூடுதல் நிர்வாக அமைப்புகளோ உருவாக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மாநில அரசு தொடர்ந்து வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, சிக்கனமான நிர்வாகம் ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வருவதாகவும், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலன், தற்போதைய தேவைகள், மாநில நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்றும் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தனது அறிக்கையில் வலியுறுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here