தொலைபேசி மோசடி கும்பலிடம் சிக்கி 75 வயது முன்னாள் பயிற்றுவிப்பாளர் RM838,000 இழந்தார்

ஜோர்ஜ் டவுன்:

பினாங்கைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் “தொலைபேசி மோசடி” கும்பலின் வலையில் சிக்கி, RM838,328 இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 75 வயது ஆடவரை கடந்த மாதம் காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தொடர்பு கொண்டு, “தவறான தகவல்களைப் பரப்பியதாலும், பணமோசடியில் ஈடுபட்டதாலும் அவரது பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று அச்சுறுத்தியுள்ளார்.

அதன்பின், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் சேமிப்புக் கணக்கு விவரங்களை கேட்டறிந்து, அவரது நிரந்தர சேமிப்புக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றும்படி உத்தரவிட்டார் என்று,
பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 11ஆம் தேதி, குறித்த விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டை தேவைப்படுவதாகவும், அதனை ஒரு கடித உறையில் வைத்து, தமது குடியிருப்பு பகுதி பாதுகாவலர் சாவடியில் வைக்கும்படியும் பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவிடப்பட்டது என அசிஸி கூறினார்.

பின்னர் தனது சேமிப்புக் கணக்கிலிருந்த அனைத்து பணமும் அடையாளம் தெரியாத நபரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதை அறிந்ததும், பாதிக்கப்பட்டவர் நேற்று வடகிழக்கு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவு (மோசடி) கீழ் விசாரிக்கப்படுகிறது. மேலும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை கேட்கும் எந்தவொரு தொலைபேசி அழைப்புகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாமென அசிஸி எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here