ஈப்போவில் அதிர்ச்சி: புதர்ப் பகுதியில் இரு இளம்பெண்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

(எஸ்.லிங்கேஸ்வரன்)

ஈப்போ:

ஈப்போவின் புந்தோங் அருகே உள்ள கைவிடப்பட்ட சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்துக்கு அண்மையிலுள்ள புதர்ப் பகுதியில் இரண்டு இந்திய இளம்பெண்கள் உயிரிழந்த நிலையில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பக் கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்கள் 14 , 15 வயதுடைய மாணவிகள் என நம்பப்படுகிறது.

பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகே அமைந்துள்ள 15 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஈப்போ மாநகர மன்றத்தின் நிர்வாகத்தில் இருந்தது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் அந்தக் கட்டிடம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதுடன், அங்கிருந்த குடியிருப்பாளர்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்தப் பகுதிக்குள் இளம்பெண்கள் எவ்வாறு சென்றனர், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் என்ன, இதில் வேறு நபர்களின் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, புந்தோங் , சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

உயிரிழந்த இருவரும் புந்தோங் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டாலும், அவர்களின் அடையாளம் , உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இரு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீசாரின் விசாரணை அறிக்கைக்குப் பிறகே சம்பவத்தின் முழுமையான பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here