கோல லங்காட்டில் உள்ள ஒரு கழிவு சேகரிப்புப் பகுதியில், துணியில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மாணவியை காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் விடுதிக் கட்டிடத்தில் அந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கோல லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று மதியம் 12.20 மணிக்கு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் தாய் என நம்பப்படும் அந்த இளம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இறந்த குழந்தையின் சடலத்தை இரகசியமாகப் புதைப்பது அல்லது வேறு வழிகளில் அப்புறப்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அக்மல்ரிசால் கூறினார்.குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.









