மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் காவல் துறை & AADK அதிகாரிகள் நியமனம்: உள்துறை அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர்:

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், ‘பகிடிவதை’ போன்ற துன்புறுத்தல்கள் மற்றும் தேவையற்ற இடையூறுகளைக் கட்டுப்படுத்தவும் மலேசியக் காவல் துறை (PDRM) மற்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு துறையின் (AADK) தொடர்பு அதிகாரிகள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளிலோ அல்லது மாணவர்களிடையேயோ ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளும் முதல் நபராக இந்த அதிகாரிகள் செயல்படுவர் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இன்று தஞ்சோங் பியாண்டாங் நில மற்றும் மாவட்ட அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற ‘கம்போங் அங்கட் மடானி மற்றும் சிறைத்துறையின் பள்ளி தத்தெடுப்பு திட்டம் 2026’ தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:

பள்ளிகளில் வன்முறை, போதைப்பொருள் புழக்கம் அல்லது ‘பகிடிவதை’ சம்பவங்கள் நேரிடும் போது, தாமதமின்றி உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் காவல் துறை மற்றும் AADK சார்பில் பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிகளுக்குச் சென்று பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவர் என்றும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கி மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுவர் என்றும் அவர் சொன்னார்.

மாணவர்களின் பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதி செய்ய உள்துறை அமைச்சு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here