விமானத்தைத் தவறவிட்ட விரக்தியில் வினோதச் செயல்; இந்திய நாட்டவர் குறித்து போலீஸ் விளக்கம்!

சிப்பாங் | மார்ச் 08, 2026:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் (KLIA2), இந்தியக் குடிமகன் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்துக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 44 வயதுடைய இந்தியக் குடிமகன் ஒருவர், மார்ச் 5-ஆம் தேதி இரவு 8:45 மணிக்குச் செல்ல வேண்டிய விமானத்தைத் தூக்கத்தில் தவறவிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விமான நிலையத்திலேயே தங்கியிருந்துள்ளார் என்று, KLIA மாவட்ட காவல்துறைத் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் ரவி முனுசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 6-ஆம் தேதி இரவு 9:50 மணியளவில், பன்னாட்டு வருகைப் பிரிவில் உள்ள ‘MyBorder’ கவுண்டர் அருகே அவர் தனது வலது தொடையில் அரிப்பு ஏற்பட்டதால் சொறிந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால்சட்டை (Trousers) சுமார் இரண்டு நிமிடங்களுக்குக் கீழே விழுந்து கிடந்தது.

அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அவரை எச்சரித்து, அவரது ஆடையைச் சரி செய்ய உதவினர். இது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் காவல்துறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் விமான நிறுவனப் பிரதிநிதிகள் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளனர். தற்போது அவர் இந்தியத் தூதரகத்திடம் (Indian High Commission) ஒப்படைக்கப்பட உள்ளார்.

அந்த நபர் வரும் மார்ச் 14-ஆம் தேதி இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையம் போன்ற பொது இடங்களில் மற்றவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லது அநாகரிகமாகக் கருதப்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனப் பொதுமக்களைப் போலீஸ் அதிகாரி ரவி முனுசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here