’தக் லைஃப்’ படப்பிடிப்பில் குழந்தைகளோடு மாஸ் காட்டிய சிம்பு

தக் லைஃப்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளோடு கொஞ்சி பேசும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணி ரத்னம் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே, சிம்பு இதற்கு முன்பு நடிக்க ஒப்பந்தமான ’கொரோனா குமார்’ படத்தில் நடித்து கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இதனால், சிம்புவுக்கு நடிக்க ரெட் கார்டா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஐசரி கணேஷ், “’தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அந்தப் படத்தை முடித்துவிட்டு எங்கள் படத்திலும் நடிக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்” என்றார்.

இதனை அடுத்து சிம்பு ‘தக் லைஃப்’ படத்தில் தனது போர்ஷனுக்கான படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தனது சுட்டி ரசிகர்களை சந்தித்துள்ளார்.

தோள்பட்டை வரை வளர்ந்த முடியை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டு, ஆளே மாறியுள்ளார் சிம்பு. குழந்தைகளுக்கு கைக்கொடுத்துக் கொண்டு, அவர்களுடன் சிரித்துப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சிம்பு ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here