அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பி.கே.ஆர் (PKR) பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் புசியா எச்சரிக்கை!

கோலாலம்பூர் | மார்ச் 25, 2026

பி.கே.ஆர் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சாலே (Datuk Dr Fuziah Salleh) தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரங்களுடன் கட்சித் தலைவர்களைத் தொடர்புபடுத்தி பரப்பப்படும் காணொளிகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து பி.கே.ஆர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கட்சிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ யாராக இருந்தாலும், ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று, புசியா சாலே வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்கள் சொந்தத் தவறுகளிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள், மற்றவர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை எளிதாகச் சுமத்துகின்றனர். வலுவான ஆதாரங்கள் இல்லாத எதனையும் உண்மையாகக் கருதக்கூடாது.

தனிநபர்களின் அல்லது கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் இத்தகையச் செயல்கள் செய்யப்படுகின்றன.

தொழிலதிபர் விக்டர் சின் (Victor Chin), பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் கேட்டதாக 40 பக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 9.5 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழலிலேயே பி.கே.ஆரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அச்சுறுத்தல் மூலம் நிறுவனப் பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்க வற்புறுத்துவதாக எழுந்த ‘கார்ப்பரேட் மாஃபியா’ புகார்களை அந்த ஆணையம் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது போன்ற புகார்கள் ஆணையத்தின் புலனாய்வுத் திறனைச் சிதைக்கும் முயற்சி என்றும் அது தெரிவித்துள்ளது.

“தகவல்களைப் பகிரும்போது அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும்,” என டாக்டர் புசியா அறிவுறுத்தியுள்ளார். பி.கே.ஆர் கட்சி தனது தலைவர்களின் நேர்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here