தெலுக் இந்தான்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தெலுக் இந்தான், ஜாலான் பாடாங் தெம்பாக் பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகளின் உயிரைப் பறித்த கார் விபத்து தொடர்பாக, 28 வயது கார் ஓட்டுநர் மீது இரு கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 4 குற்றச்சாட்டுகள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆர். அலெக்ஸ் (R. Alex) என்ற அந்த நபர் மீது, மாஜிஸ்திரேட் நைடாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசித்துக்காட்டப்பட்டன.
ஜூலை 26 மாலை 6:35 மணியளவில், SMK ஸ்ரீ செத்தியா பள்ளி அருகே 17 வயது நுர் டானியா அரிசா சலீம் (Nur Dania Arissa Salim) என்பவரைக் கொலை செய்ததாக முதல் குற்றச்சாட்டும், இரண்டாவதாக அதே இடம் மற்றும் நேரத்தில் 16 வயது நுர் அதிகா அப்துல்லா (Nur Atikah Abdullah) என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்விரு குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அடுத்ததாக போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தைக் கட்டுப்பாட்டின்றி இயக்கி, ஆதம் அர்ஜுனா அப்துல்லா எனும் 7 வயது சிறுவனுக்குக் காயம் ஏற்படுத்தியதற்காக (சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 44(1A)(a)-இன் கீழ் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை மற்றும் RM30,000 முதல் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்).
இறுதியாக அலட்சியமாக வாகனம் ஓட்டி, A. சுரேஷ் (வயது 50) என்பவரின் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 43(1)-இன் கீழ் RM5,000 முதல் RM10,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் குறித்த சந்தேக நபர் இக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் சந்தேக நபரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வழக்கில் நீதிமன்றம் சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. பிரேதப் பரிசோதனை, நச்சியல் (Toxicology) மற்றும் பிற அறிக்கை சமர்ப்பிப்புகளுக்காக வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






















