கூலிம் :
கெடா, கூலிமில் உள்ள வணிகக் கட்டிடக் கட்டுமானத் தளம் ஒன்றில் நேற்றைய தினம் (ஜூலை 29, புதன்கிழமை) மலேசியக் குடிநுழைவுத் துறை நடத்திய ‘ஆப்ஸ் சாபு’ (Ops Sapu) அதிரடி சோதனையில் 129 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
கிடைக்கப்பட்ட உளவுத் தகவல்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில், கெடா மாநிலக் குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை 10:00 மணியளவில் இச்சோதனையை மேற்கொண்டனர்.
கட்டுமான இடத்தில் இருந்த 30 மலேசியர்கள் மற்றும் 129 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 159 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில், 1959/63 குடிவரவுச் சட்டம் மற்றும் 1963 குடிவரவு விதிகளை மீறியதற்காக 129 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 129 பேர்ரில் 125 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர். இவர்களில் மிக அதிகமானோர் வங்காளதேசத்தை சேர்ந்த 100 பேர், 11 பாகிஸ்தானியர்கள், 10 இந்தோனேசியர்கள் மற்றும் மியன்மார் நாட்டினரும் அடங்குவர்.





















