பாங்காக், இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆசிஷ்(24) மற்றும் ஹிமான்ஷு(20) ஆகிய 3 பேர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்கள் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று சேர்ந்ததும், 3 இளைஞர்களையும் மர்ம நபர்கள் சிலர் பட்டயா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் 3 பேரையும் அடைத்து வைத்தனர். மேலும் அவர்களது கை, கால்களை கட்டி, அடித்து சித்ரவதை செய்யத் தொடங்கினர். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, கடத்தப்பட்ட 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் தலா ரூ.40 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர் இந்திய தூதரகத்தின் உதவியோடு, தாய்லாந்து நாட்டின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடத்தப்பட்ட 3 இளைஞர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் வீடியோ கால் மூலம் கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர். அதில் அந்த 3 இளைஞர்களும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் காயங்களோடு இருந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த தாய்லாந்து போலீசார், சி.சி.டி.வி. உள்ளிட்ட ஆதாரங்களின் உதவியோடு கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து, பட்டயா பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இந்திய இளைஞர்களை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
அவர்களின் உடல்களில் கட்டையால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. அதே சமயம், முகத்தில் ரத்தம் வழிவது போல் காட்டுவதற்காக சிவப்பு நிற சாயத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்கள் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் அவர்கள் 5 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.









