18 ஆண்டுகளாக நீடித்த 54 கடை வீட்டு நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு தீவிரம் – டத்தோ ஜாப்னி ஷுகோர்

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

சுமார் 18 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் நீடித்து வரும் 54 கடை வீட்டு நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து, ஜோகூர் மாநில வீடமைப்பு, உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜாப்னி முகமட் ஷுகோர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட குடியேற்றக்காரர்கள், அவர்களின் வாரிசுகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு நிலப்பகுதியின் பின்னாலும் ஒரு குடும்பத்தின் உரிமை, எதிர்பார்ப்பு, எதிர்காலம் இருக்கிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் மக்களின் வேதனையை மாநில அரசு நன்கு புரிந்துகொள்கிறது,” என்றார்.

ஜோகூர் முதலமைச்சர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசியின் அறிவுறுத்தலின்படி, மலேசிய திவால் துறை, உள்ளூராட்சி மன்றம், மீட்பு மேம்பாட்டாளர், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து மாநில அரசு தீர்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜோகூர் முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே பல ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, மீட்பு மேம்பாட்டாளருடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வருவதாகவும், அனைத்து முடிவுகளும் அசல் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளின் சம்மதத்துடன் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது, 54 கடை வீட்டு நிலங்களை இரு மாடி மாடித்தொடர் வீடுகளாக மாற்றும் முன்மொழிவு, நிலத்தை மீள ஒப்படைத்து மறுவழங்கும் நடைமுறை உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலனையில் உள்ளதாக அவர் கூறினார்.

எனினும், இந்த முன்மொழிவுகள் அனைத்தும் மாநில அரசு, மலேசிய திவால் துறை, ஜோகூர் மாநில நில அலுவலகம், ஜோகூர் பாரு மாநகர் மன்றம், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்குப் பின்னரே அமல்படுத்தப்படும் என்றும், எந்தத் தரப்பினரின் உரிமையும் பாதிக்கப்படும் வகையில் அவசர முடிவுகள் எடுக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஜோகூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட 18 வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, குடியிருப்பு நிறைவு சான்றிதழ் (CCC) பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் 4,253 வீடுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டங்களின் மொத்த மேம்பாட்டு மதிப்பு 1.09 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படாமல், நியாயமான தீர்வு கிடைக்கும் வரை மாநில அரசு கண்காணிப்பை தொடரும் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் நலனுக்கு ஏற்ற தீர்வை எட்டுவதில் ஜோகூர் அரசு உறுதியாக இருப்பதாக டத்தோ ஜாப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here