பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை தொடர்பான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவையின் (பெர்மிம்) பிரதிநிதிகள் தேசியப் பதிவுத் துறையின் (JPN) மூத்த அதிகாரிகளுடன் மரியாதை நிமித்த சந்திப்பும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடலும் மேற்கொண்டனர். இச்சந்திப்பு புத்ராஜெயாவில் உள்ள தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
பெர்மிம் சார்பில் அதன் தலைவர் முகமட் அஸ்மான் ஷா, துணைத் தலைவர் டாக்டர் நிசாம் ஷா, பொதுச் செயலாளர் ஆடம் மாலிக் மற்றும் துணைப் பொருளாளர் டத்தின் சப்ரினா ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த மாதம் தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அவர்களுடன் பெர்மிம் நடத்திய சந்திப்பின் தொடர்ச்சியாக, பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, JPN MEKAR திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக பெர்மிம் உடன் இணைந்து பணியாற்ற ஒரு அதிகாரியை JPN நியமித்துள்ளது. இதனைப் பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷா மிகவும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்
இன்றைய கலந்துரையாடலில், JPN MEKAR திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டு நிகழ்ச்சிக்கான பொருத்தமான தேதிகள், பரிந்துரைக்கப்பட்ட நேரம் மற்றும் ஒவ்வொரு அமர்விலும் ஏற்கக்கூடிய அதிகபட்ச விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறித்து JPN தரப்பில் தகவல் வழங்குமாறும் PERMIM கேட்டுக்கொண்டது.
மொத்தத்தில், இச்சந்திப்பு மிகவும் நேர்மறை மற்றும் ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பை ஒருங்கிணைத்து சிறந்த ஒத்துழைப்பையும் அன்பான வரவேற்பையும் வழங்கிய புவான் நோர் பாதிலா அவர்களுக்கு PERMIM தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டது.
பெர்மிம் மற்றும் தேசியப் பதிவுத் துறையினருக்கிடையிலான இந்த ஒத்துழைப்பு, ஆவணங்கள் மற்றும் குடியுரிமை தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்கும் சமூகத்தினருக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அஸ்மான் ஷா தெரிவித்துள்ளார்.










