சிறு வியாபாரிகளுக்கு முதல் ஆண்டு உரிமக் கட்டண விலக்கு

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் சிறு வியாபாரிகள், சில்லறை வணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் முதல் ஆண்டுக்கான வணிக உரிமக் கட்டணத்தை விலக்கவும், குறைந்த ஆபத்துள்ள வணிகங்களுக்கான உரிம விண்ணப்பங்களை 24 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கவும், வணிக உரிமப் புதுப்பிப்பை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இத்திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வீடமைப்பு, ஊராட்சித் துறை ஆட்சிக்குழுத் உறுப்பினர் டத்தோ முகமது ஜஃப்னி முகமது ஷுகோர் தெரிவித்தார். இதற்கான முன்னோட்டச் சோதனை வரும் டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநில ஊராட்சி துறையின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள், முக்கிய செயல்திறன் குறியீட்டு இலக்குகள், திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸியிடம் தாம் விளக்கமளித்ததாக அவர் கூறினார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி மாநில அரசுச் செயலாளர் அலுவலகத்தின் ஊராட்சித் துறை பிரிவு, ஊராட்சி அமைப்புகள் சார்ந்த 69 முக்கிய செயல்திறன் குறியீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 33 திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 25 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், எஞ்சிய 11 திட்டங்கள் ஒப்புதல், ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் உள்ளன. எந்தத் திட்டமும் இன்னும் தொடங்கப்படாத நிலையில் இல்லை என ஜஃப்னி தெரிவித்தார்.

மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் 13 உயர் தாக்கத் திட்டங்களில் ஒன்பது நிறைவடைந்துள்ளன. நான்கு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜோகூர் மிருகக்காட்சிசாலை இரண்டாம் கட்ட மேம்பாடு, இரவு நேர மிருகக்காட்சிசாலை, டங்கா வளைகுடா பொதுப் பூங்கா, ஜோகூர் பாரு நகர்ப்புற வனப்பகுதி மேம்பாடு, தாமான் மெர்டேக்கா, கம்போங் சுங்கை மெலாயு சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம், சுங்கை லெபாம் பொழுதுபோக்கு மையம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

நிறைவடைந்த பொது வசதிகள் மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜூலை 31ஆம் தேதி வரை ஜோகூர் மிருகக்காட்சிசாலைக்கு 368,784 பேர் வருகை தந்துள்ளனர். டங்கா வளைகுடா பொதுப் பூங்கா 290,408 பேரையும், ஜோகூர் பாரு நகர்ப்புற வனப்பகுதி 112,479 பேரையும், தாமான் மெர்டேக்கா 34,535 பேரையும் ஈர்த்துள்ளது. கம்போங் சுங்கை மெலாயு சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்கு 15,188 பேர் வருகை தந்துள்ளனர்.

2027 முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான ஊராட்சி நிர்வாகத்தின் அடுத்தகட்டத் திட்டத்தில் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது ஏழு வேலை நாள்கள் வரை எடுக்கக்கூடிய குறைந்த ஆபத்துள்ள வணிக உரிம விண்ணப்ப நடைமுறையை 24 மணி நேரமாகக் குறைப்பது பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜோகூரிலுள்ள 16 ஊராட்சி அமைப்புகளிலும் திறன்மிகு கண்காணிப்புக் கேமராக்கள், போக்குவரத்து விளக்குகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு ஊராட்சி அமைப்பிலும் குடும்பங்களுக்கான சிறிய நீர் கேளிக்கைப் பூங்காவை உருவாக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் புகார்களை விரைவாகத் தீர்ப்பதற்கான மாநில புகார் மேலாண்மை முறையும் அனைத்து 16 ஊராட்சி அமைப்புகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதுவரை 17,195 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 11,668 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் கால வாக்குறுதியாக மட்டும் இருக்கக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, முக்கிய செயல்திறன் குறியீடு, அளவிடக்கூடிய நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு அதன் பயன் சென்றடைய வேண்டும் என்பதே மாநில அரசின் இலக்கு என ஜஃப்னி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here