(கோகி கருணாநிதி)
கூலாய்:
கூலாய் மாவட்டத்தில் ஜே235, ஜாலான் சீலோங் லாமா சாலையின் 0.70 முதல் 1.40 கிலோமீட்டர் வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ரி.ம.4 லட்சம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கட்கிழமை சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என ஜோகூர் வீடமைப்பு, ஊராட்சி துறை உறுப்பினர் டத்தோ முகமது ஜஃப்னி முகமது ஷுகோர் தெரிவித்தார்.

சீலோங் சுற்றுவட்டார மக்களுடன் தொழிற்சாலைப் பணியாளர்கள், வர்த்தக வாகனங்கள், கனரக லாரிகள் தினமும் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக இச்சாலை உள்ளது. கனரக வாகனங்களின் தொடர்ச்சியான போக்குவரத்தால் சாலையின் மேற்பரப்பு சேதமடைந்து, குறிப்பாக நெரிசல் நேரங்களில் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இம்முறை சேதமடைந்த பகுதிகளை வெறுமனே ஒட்டுப்போடும் முறையில் சீரமைக்காமல், அதிக போக்குவரத்து சுமையைத் தாங்கக்கூடிய நார் வலுவூட்டப்பட்ட கற்காரை (Fibre Reinforced Concrete – FRC) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தேவையான தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜஃப்னி விளக்கினார்.

முதலில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டதன் மூலம் திட்டமிட்ட காலத்தைவிட 8 நாட்கள் முன்னதாக, ஆகஸ்ட் 9ஆம் தேதியே பணிகளை முடிக்க முடிந்துள்ளது.
கூலாய் நகராண்மைக் கழகம், ஜோகூர் பொதுப்பணித் துறை, கூலாய் மாவட்ட பொதுப்பணித் துறை, ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழில்நுட்பக் குழுவினர், போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய கூலாய் மாவட்ட காவல்துறையினருக்கும் ஜஃப்னி நன்றி தெரிவித்தார்.
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸியின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறைக்கு ஏற்ப, மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதுடன் ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு நேரடிப் பயனை வழங்குவதை உறுதி செய்ய திட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.























