முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு மரம் இருக்கும். ஆனால் தற்போது நகரமயமாக்கல் காரணமாக மரங்களை அழித்துவிட்டு, முழுவதும் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிவிட்டோம். இதனால் கோடை காலம் வந்துவிட்டாலே, பலருக்கும் வீட்டில் ஏ.சி. இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. கோடை காலம் விடைபெற்ற பின்னரும் கூட பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது, எல் நினோ பிரச்சினை வேறு. இப்படி இருக்கையில் கற்பனை செய்து பாருங்கள், பனிக்கட்டியை கொண்டு ஒரு வீட்டை கட்டி அதில் குடியிருந்தால், எவ்வளவு அருமையாக இருக்கும்? சொல்லும்போதே மனம் குளிர்ச்சி அடைகிறது அல்லவா? நிஜத்தில் இது போல வடிவமைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு சுவீடனில் உள்ள `ஜுக்காஸ்ஜார்வி’ என்ற சிறிய கிராமத்தில், பனியைக் கொண்டு ஒரு ஓட்டலை கட்டியுள்ளனர். இது சுமார் 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1989-ம் ஆண்டு முற்றிலும் பனியால் கட்டப்பட்ட உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய ஐஸ் ஓட்டல் இதுவாகும்.
இந்த ஓட்டலுக்குள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 2,100 சதுரமீட்டர் அளவுள்ள ‘ஆர்ட் ஹால்’ உள்ளது. குளியலறை, ஒன்பது அறைகள், ஒரு ஐஸ் கேலரி, ஒன்பது டீலக்ஸ் அறைகள், ஐஸ் தேவாலயம் ஆகியவையும் அடங்கும். இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் ஓட்டலில் இருக்கின்றன. உலகளவில் புகழ்பெற்ற திறமையான கலைஞர்களை கொண்டு பனிக்கட்டிகளை தத்ரூபமாக செதுக்கி வடிவமைத்திருக்கிறார்கள்.
ஓட்டலின் உட்புற வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நிர்வகிக்கப்பட்டுள்ளது. கோடையிலும் ஓட்டல் குளிர்ச்சியாக இருக்கும் வண்ணம் உட்புற கட்டமைப்பு எளிதில் உருகாத வகையில் செதுக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் உறைபனி வெப்பநிலைக்கு ஏற்ப வாழ்வது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே வடக்கே 200 கி.மீ. தொலைவில், கோடை மாதங்களில் தொடர்ந்து 50 நாட்களுக்கு சூரியன் பிரகாசிக்கிறது. இந்த சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் அறைகள், தேவாலயம் மற்றும் பிற கட்டிடங்களுக்கு மின் அற்றல் வழங்கப்படுகிறது.
வித்தியாசமான அமைப்புடன் கட்டப்படுள்ளதால், இங்கு வருகை புரிபவர்கள் தங்களுக்கு தனித்துவமான அனுபவம் கிடைப்பதாகவும், மனதிற்கு இதமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் இலையுதிர் காலம் குளிர்காலமாக மாறும்போது, சைக்கிள் ஓட்டுதல், மீன்பிடித்தல், சிற்ப வேலை, பனிசறுக்கு போன்ற சாகசங்களிலும் ஈடுபட்டு மகிழலாம். இங்கு சோதனைக்கு பின்னரே விருந்தினர்கள் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சூரிய ஒளி ஓட்டல் மீது படும்போது, முற்றிலும் கரைந்து விடாதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். வசந்த காலம் வரும்போது பனி எல்லாம் உருகி டோர்ன் நதிக்கு திரும்பும். இதில் அதிசயிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஓட்டலை ஆண்டுக்கு ஒரு முறை மீண்டும் கட்டி எழுப்புகிறார்கள்.
ஆம்! ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐஸ் ஓட்டலின் உள் கட்டமைப்புகளை வடிவமைக்க, உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுகிறார்கள். சுமார் 50 கலைஞர்கள் ஸ்வீடனுக்குச் சென்று, கட்டமைப்பை மீண்டும் உருவாக்குகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் ஓட்டல் கொஞ்சம் வித்தியாசமாகவே தோன்றும்.
நவம்பரில் தொடங்கும் கட்டுமானம், ஜனவரி மாதத்தில் இறுதி வடிவம் பெற்று வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்படும். இந்த ஓட்டல் உருவாக்கப்பட்டதில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தந்துள்ளதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்த ஓட்டல் சுவீடனின் 7 அதிசயங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
























