10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் மலேசியப் பயணிகளைக் கையாள்வதில் இரண்டு விமான நிறுவனங்களுக்கு மட்டுமே சிக்கல்கள் உள்ளன என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். மற்ற விமான நிறுவனங்களுக்கு இந்தக் கடவுச்சீட்டுகளில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும், அவை அனைத்துலகத் தரத்தைப் பூர்த்தி செய்வதாகவும், உலகெங்கிலும் உள்ள குடிநுழைவுத் துறைகளால் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் ஜகாரியா மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், அந்த இரண்டு விமான நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார் என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடவுச்சீட்டுகள் மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று ஒரு குழப்பம் நிலவுகிறது. அது உண்மையல்ல. அந்த இரண்டு விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் அமைப்புகள் 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை ஆதரிக்காததால் மட்டுமே இந்தப் பிரச்சினை வெளிப்பட்டது என்று அவர் கூறினார்.
சில பயணிகள் மலேசியா திரும்புவதில் சிரமங்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை வழங்குவதை அத்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அவர்கள், கடவுச்சீட்டுகளின் காலாவதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, ஏற்கனவே உள்ள ஆறு மாதங்களுடன் கூடுதலாகப் புதிய 10 ஆண்டு செல்லுபடியாகும் காலத்தைச் சேர்த்து, தங்கள் கடவுச்சீட்டுகளைப் புதுப்பித்திருந்தனர். அதன்பிறகு, குடிநுழைவுத் துறை தற்போதைக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.










