கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா, புளோரஸ் தீவில் (Flores Island) பதிவான 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், அங்குள்ள பகுதியில் இருந்த 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு (Wisma Putra) உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று சனிக்கிழமை விடுத்த ஊடக அறிக்கையில், நாகேக்கியோ பிராந்தியத்தின் எம்பாய் (Mbay) பகுதிக்கு வடகிழக்கே உள்ளூர் நேரப்படி காலை 4.58 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் இதுவரை மலேசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தூதரகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், உடனடித் தொடர்புகளுக்கும் தூதரக உதவிகளுக்கும் இ-கான்சுலர் (e-Konsular) இணையதளம் மூலம் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
அவசர தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அவசர உதவி எண் (+6281380813036) அல்லது மின்னஞ்சல் ([email protected]) வழியாகத் தொடர்புகொள்ளலாம்.
























