கோலாலம்பூர்:
காஜாங், தாமான் ஜாஸ்மினில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல்போனதாக புகாரளிக்கப்பட்ட 17 வயதுச் சிறுமி இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காணாமல் போன ஃபர்சானா நபீலா அப்துல்லா என்ற அச்சிறுமி, காஜாங்கில் உள்ள ஜேட்ஹில்ஸ் பகுதியில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுமி மீட்கப்பட்ட விபரம் குறித்து அவரது தாயார் ரபியாதுல் அடவியா ரோஸ்லிக்கு (34) இன்று காலை 8 மணியளவில் காவல்துறையினர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த குடும்பத்தினர் காலை 11 மணியளவில் காஜாங் போலிஸ் நிலையத்தில் சிறுமியை நேரில் சந்தித்தனர்.
தன் மூத்த மகள் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சியடைந்த தாயார் ரபியாதுல் அடவியா கூறுகையில், “அல்ஹம்துலில்லாஹ், என் மகள் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்தது. அவளது பாதுகாப்பான வருகைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,” எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் பொதுமக்களின் உதவியை நாடியிருந்த நிலையில், போலிசாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் அச்சிறுமி நலமுடன் மீட்கப்பட்டுள்ளார்.
























