ஜோகூரில் டெங்கி பாதிப்பு 108.7 விழுக்காடு அதிகரிப்பு

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், ஜோகூரிலும் அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டின் 32ஆவது தொற்றுநோயியல் வாரம் வரை ஜோகூரில் 8,639 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,140 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது 108.7 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலவரத்தை பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமினாவில் டெங்கி நிலவரத்தை லிங் தியான் சூன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் இதுவரை 19 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு பகுதியில் டெங்கி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும்போது, நோய்ப் பரவல் சங்கிலியை முறியடிக்க உடனடி நடவடிக்கையுடன் குடியிருப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

“வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றுவதுடன் சுற்றுப்புறத் தூய்மையையும் தொடர்ந்து பேண வேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவர் டெங்கியால் பாதிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, அதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஏடிஸ் கொசுவை ஒழிப்பது அரசுத் துறைகளின் கடமை மட்டுமல்ல; சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகளும் இருந்தால், குறிப்பாக ஜோகூர் பாரு மாவட்டத்தில் டெங்கி பாதிப்பைக் குறைக்க முடியும் என்று லிங் தியான் சூன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here