சிரம்பானில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர் படுகாயம்!

சிரம்பான்:

ங்குள்ள ‘கார்டன் ஹோம்ஸ்’ (Garden Homes) குடியிருப்புப் பகுதியில் இன்று பிற்பகல் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தை நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் 50 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு (JSJN) நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அலி (72) என்பவர் கூறுகையில், “பிற்பகல் 2 மணியளவில் தொழுகை முடிந்து வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறினார். அவர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதாகச் சொன்னார். ஆனால் நான் வீட்டிற்குள் இருந்ததால் எனக்குச் சத்தம் கேட்கவில்லை.

அதன் பிறகு, ஏராளமான காவல் துறை வாகனங்கள் எங்கள் பகுதிக்கு வந்து சேர்ந்தன. வீட்டின் முன்னால் உள்ள சாலை முற்றிலும் மூடப்பட்டு, வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here