மலாக்கா:
மலாக்கா மாநிலச் சட்டமன்றம் இம்மாத இறுதிக்குள் கலைக்கப்படலாம் என்று மாநில முதல்வரும், மாநில பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் ரஹூஃப் யூசோ பலமான சூசகத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று சுங்கை உடாங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ‘காம்போங் பெர்தாம் உலு’ பகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இன்னும் “இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்குள்” சட்டமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
“சட்டமன்றக் கலைப்பிற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நான்கு வெள்ளிக்கிழமைகள் இருப்பதாகக் கூறியிருந்தேன்; ஆனால் இப்போது இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே எஞ்சியுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நேற்றைய தினம் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி பேசுகையில், மலாக்கா மாநிலத்தில் புதிய தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டமன்றக் கலைப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ரஹூஃப் விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மக்களும், முக்கியமாக இளம் வாக்காளர்களும் மாநிலத்தின் எதிர்காலத்தையும் திசையையும் தீர்மானிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதால், இந்த அறிவிப்பை தாமதிக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

























