மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு..? வெளியான பரபரப்பு தகவல்

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. மே 4-ஆம் தேதி ஒட்டுகள் எண்ணப்பட்டன. மே 10-ஆம்தேதி முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றார். மே 13-ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

இந்த வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் முதல்-அமைச்சர் விஜய்யை ஆதரித்தனர். அதில் 3 பேர் முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள்.

பின்னர் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து இசக்கி சுப்பையா விலகினார். அதன் பிறகு சற்று இடைவெளி விட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விலகினர். அந்த வகையில் மொத்தம் 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டனர்.

புதிய கூட்டணி

இதனைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் த.வெ.க.வில் இணைந்து விட்டனர். வெற்றிடம் ஏற்பட்ட தொகுதிகளில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் போட்டியிடக்கூடிய தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். நேற்று காலை த.வெ.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்த கட்சிகள் யாவும் ஆதரவு கேட்டு அதனதன் நட்பு கட்சிகளிடம் பேசி வருகின்றன. அந்தவகையில் தி.மு.க. சில கட்சிகளை தொடர்பு கொண்டுள்ளது. த.வெ.க.வும் புதிய கூட்டணி அமைத்து அந்த கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. அதைப்போல அ.தி.மு.க.வும் அதன் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க., புதிய நீதிக்கட்சி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளது. அ.ம.மு.க.வும் அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

ரகசிய தூது

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தலைவர்களை இன்னும் யாரும் சந்திக்கவில்லை. விரைவில் அ.தி.மு.க. தலைவர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் த.வெ.க. சார்பிலும் ரகசிய தூது அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. தேர்தல் நடக்கக் கூடிய 2 தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும்.

சவுமியா அன்புமணி

இவற்றில் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். ஆகவே அவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பா.ம.க.வுக்கு தூதுவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அன்புமணியைப் பொறுத்த வரை அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அவரது மனைவி சவுமியா, முதல்-அமைச்சர் விஜய் மீது பரிவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பா.ம.க. இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here