கோலாலம்பூர்:
கோலாலம்பூர் மற்றும் அம்பாங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததில், வாகனங்களுக்குள் சிக்கித் தவித்த மூவர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
முதல் சம்பவம் அம்பாங், ஜாலான் மெங்குடுவில் உள்ள ‘டஸ்கனி ஹோம் ஃபர்னிச்சர்ஸ்’ அருகே நிகழ்ந்துள்ளது. சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் பெருகியதில் காரொன்று அதில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கெராமாட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள், காரில் இருந்த ஒருவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இரண்டாவது சம்பவம் கோலாலம்பூர், தாமான் யூ-தாண்ட் (Taman U-Thant), தேசா அங்கசா கொண்டோமினியம் அருகே நிகழ்ந்தது. அங்கு சுமார் 2 அடி உயர வெள்ள நீரில் சிக்கிய பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு காரில் இருந்த இருவர், ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
“இரண்டு சம்பவங்களிலும் கார்களுக்குள் சிக்கிய மூன்று நபர்களும் எவ்விதக் காயங்களுமின்றி நலமாக மீட்கப்பட்டுள்ளனர்.” என்று, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அம்பாங், உக்காய் பெர்டானா ஹைட்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வெள்ளநீர் புகுந்ததைத் தொடர்ந்து சிலாங்கூர் தீயணைப்புத் துறையினரின் உதவி நாடப்பட்டது. வெள்ள நீரில் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் அச்சம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கெராமாட் தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள மேனாரா சாஃபுவான் கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்திலும் வெள்ளநீர் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் எவரும் பாதிக்கப்படவில்லை. திதிவங்சா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் அங்கு நிலைமையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

















