முன்னாள் பிரதமர் நஜீப்பின் மன்னிப்பு மனு தள்ளிவைப்பு தன்னிச்சையாக நடந்திருக்க முடியாது — பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பம் மீதான பரிசீலனையை கூட்டரசு பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் ஒத்திவைத்ததற்கான உண்மையான காரணங்களை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாஸ் (PAS) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான், நாட்டின் முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் பொதுமக்களின் நலன் சார்ந்த ஒன்றாகும் என்றும், இதில் எதையும் மறைக்கக் கூடாது என்றும் கூறினார்.

“மன்னிப்பு வாரியத்தின் முன் வைக்கப்பட்ட நஜீப்பின் மனு ஒத்திவைக்கப்பட்டது தானாக நடந்திருக்க முடியாது. மன்னிப்பு வாரிய உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது தொடர்புடைய இதர தரப்பினரிடமிருந்தோ எதிர்ப்புகளோ அல்லது உத்தரவுகளோ வந்ததன் காரணமாகவே இந்த தள்ளிவைப்பு நடந்திருக்க வேண்டும். எனவே, இதற்கான உண்மையான பின்னணியை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று பாஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பிரதமர் துறையின் சட்ட விவகாரங்கள் பிரிவு (BHEUU) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டிய தக்கியுதீன், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற கூட்டரசு பிரதேசங்கள் (கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா) மன்னிப்பு வாரியத்தின் 63-வது கூட்டத்தில், நஜீப்பின் மன்னிப்பு மனு பரிசீலனையைப் பின்னர் நடக்கும் மற்றொரு கூட்டத்திற்கு ஒத்திவைக்க மாமன்னர் சம்மதம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தொடர்பான இந்த உயர் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் முடிவுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முழு உரிமை உண்டு என்பதால், இதில் முழு வெளிப்படைத்தன்மை அவசியம் என பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here