கோலாலம்பூர்:
இங்குள்ள சான் சௌ லின் பகுதியில் போதைப்பொருள் போதையில், தன்னைக் கைது செய்ய முயன்ற காவல்துறை அதிகாரிகளைக் கத்தியைக் கொண்டு தாக்க முயன்ற 20 வயது இளம்பெண் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை 3.45 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்துச் செராஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.
கைது நடவடிக்கையின் போது அந்தப் பெண் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டுக் கத்தியைக் கொண்டு அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகவும், இருப்பினும் அவருக்கு முந்தைய குற்றப் பின்னணிகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் ‘கெட்டமின்’ வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று, அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட் கூறினார்.
ஆயுதம் கொண்டு காயம் விளைவிக்க முயற்சித்தல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சந்தேக நபரான அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணைக்காக அவர் தற்போது நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.














