“நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” வெளியான பிரிட்டன் இளவரசியின் வீடியோ

தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

42 வயதான கேட் மிடில்டன், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார். கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட கேட் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், ”எனக்கு கீமோதெரபி சிகிச்சை எடுக்க வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் எனது பிரச்சினையை எடுத்துச் சொல்லியுள்ளோம். இதை நானே எனது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன். நான் தற்போது நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்ஸுக்கும் முதலில் அதிர்ச்சி அளித்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே கீமோ சிகிச்சையை தொடங்க முடிந்தது. எனினும் ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் நான் வலுப்பெறுகிறேன் ” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here