முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவும் வகையில் அம்னோ ஒரு நிதியைத் தொடங்கவுள்ளது. இந்த அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, அவரது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அம்னோ தலைவர் அகமது சாஹித் ஹமிடி, கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நிதிக்கு பங்களிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அனைத்து விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க, வெளிப்படையான மற்றும் முறையான வழியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் மூலம், தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஆதரவை வெளிப்படுத்த விரும்பும் பிறர் தாமாக முன்வந்து பங்களிக்குமாறு அம்னோ கேட்டுக்கொள்கிறது என்று அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, ஆகஸ்ட் 23, 2028 வரை தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு நஜிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கூட்டாட்சிப் பிரதேசங்களுக்கான மன்னிப்புக் குழுவின் (FTPB) 64ஆவது கூட்டத்தைத் தொடர்ந்து, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கியதாக அப்பிரிவு கூறியது.
பிப்ரவரி 2024இல் கூட்டாட்சிப் பிரதேசங்களுக்கான மன்னிப்புக் குழு (FTPB) நஜிப்பின் அசல் 12 ஆண்டு சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்ததிலிருந்து, 73 வயதான நஜிப் காஜாங் சிறையில் குறைக்கப்பட்ட ஆறு ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார். ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை அம்னோ நன்றியுடன் வரவேற்பதாகக் கூறிய ஸாஹிட், நஜிப், அவரது குடும்பத்தினர், அவருக்காகத் தொடர்ந்து நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும் இருந்த கட்சி உறுப்பினர்களுக்கு இது மிகவும் அர்த்தமுள்ளதாக அமையும் என்று குறிப்பிட்டார். இந்த முடிவை எடுத்ததற்காக சுல்தான் இப்ராஹிமுக்குக் கட்சியின் நன்றியையும் அவர் தெரிவித்தார்.
















