கோலாலம்பூர்:
சரவாக், செலங்காவ் – மூக்கா சந்திப்பிலுள்ள மேம்பாலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில் 41 வயது பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 19 வயது மகன் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்த பெண் பேட்ரிசியா கோலா லூமுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், அவர் பயணித்த வாகனம் பலத்த சேதமடைந்ததில் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்துக் மாலை 5.01 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாகச் சிபு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் ஆண்டி அலி தெரிவித்தார்.
தகவல் கிடைத்த மூன்று நிமிடங்களிலேயே செலங்காவ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்பாகவே, காயமடைந்த 19 வயது இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். எனினும், அந்த இளைஞரின் தாய் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தார். சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி நாங்கள் அவரை வெளியே எடுத்தோம்.”என்று ஆண்டி அலி கூறினார்.
வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணைப் பரிசோதித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.























