ஜோகூர் அன்புதவித் திட்டத்தின் (BKJ) கீழ் மாச்சாப் தொகுதியில் 4,000 பேருக்கு மேல் நிதியுதவி!

(கோகி கருணாநிதி)

மாச்சாப்:

ஜோகூர் அன்புதவித் திட்டத்தின் (BKJ) நான்காம் கட்ட மேல்முறையீட்டின் கீழ், மாச்சாப் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 4,000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலைத் தெரிவித்த ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாபிஸ் காஸி உதவித்தொகையைப் பெறுவதற்கான மேல்முறையீடு செய்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாகக் கூறினார்.

மூத்த குடிமக்கள், ஆதரவற்ற சிறார்கள், இல்லத்தரசிகள், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள், சிறு வியாபாரிகள், பாதுகாவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், சவக்குழி தோண்டும் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த உதவியின் மூலம் பயனடைந்துள்ளனர்.

மாநிலத்தில் அரசாங்கத்தின் கவனமும் உதவியும் தேவைப்படும் மக்கள் இன்னும் இருப்பதைத் தாம் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதற்காகவே மேல்முறையீட்டு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.

தகுதி விதிகளை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“வழங்கப்பட்ட தொகை பெரியதாக இல்லாவிட்டாலும், பயனாளிகளின் அன்றாடச் செலவுச் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறேன். மாநிலத்திற்கு போதுமான வருவாயும் நிதி வசதியும் இருக்கும் வரை, மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் உதவிகள், வசதிகள், திட்டங்கள் வாயிலாக மாநில வருவாயை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடரும்,” என அவர் கூறினார்.

இதற்கிடையே, மாச்சாப் சுற்றுவட்டாரத்தில் வாழும் நான்கு குடும்பங்களை ‘அன்புச் சந்திப்புத் திட்டத்தின் கீழ் நேரில் சந்தித்ததாக ஒன் ஹாபிஸ் தெரிவித்தார்.

அக்குடும்பங்களில் சிலர் பொருளாதாரச் சிரமங்களையும் சிலர் உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக அவர் கூறினார். அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து உதவிகளை வழங்கியதோடு, மேலும் எவ்வகையான ஆதரவுகளை வழங்க முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here