வீட்டின் வரவேற்பறை அருகே குப்புறக் கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் சடலம்: தந்தை மற்றும் அவரது மகன் கைது!

கோலாலம்பூர்:

கோலா கங்சார், கம்போங் சே பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

44 வயதுடைய தந்தை மற்றும் 15 வயதுடைய அவரது மகன் ஆகிய இருவரையும் முறையே 7 நாட்கள் மற்றும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோலா கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அஸ்லின் சேதி சைனல் அபிடின் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் வேளையில் காத்தி காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் விரைந்தனர். அங்கு 49 வயதுடைய மலாய் பெண் ஒருவர் வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் குப்புறக் கிடந்தவாறு மயங்கிக் கிடந்ததை அவரது குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் சந்தேகநபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இச்சம்பவத்திற்கு முதன்மையான காரணம் என தெரியவந்துள்ளதாக கோலா கங்சார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹைஷாம் ஹாரூன் கூறினார்.

இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை வழக்காக) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here