கோலாலம்பூர்,
மலேசியாவின் ஹலால் தொழில்துறையை உலகளாவிய வர்த்தகச் சந்தையில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற 22ஆவது மலேசிய அனைத்துலக ஹலால் கண்காட்சி (MIHAS 2026), முதல் இரண்டு நாட்களிலேயே 30,000 வர்த்தகப் பார்வையாளர்களை ஈர்த்துச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் 23 முதல் 26ஆம் தேதி வரை கோலாலம்பூரில் உள்ள மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், 58 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் நிறுவனங்களும் பங்கேற்றனர்.
மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகமான MATRADE ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சியில், 2,000 கண்காட்சி அரங்குகள், 1,700 கண்காட்சியாளர்கள் மற்றும் 450 வெளிநாட்டு வர்த்தகக் கொள்முதலாளர்கள் இடம்பெற்றனர்.
மொத்தம் 50,000 வர்த்தகப் பார்வையாளர்களை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டிருந்த MIHAS 2026, இரண்டாவது நாளின் முடிவிலேயே 30,000 பார்வையாளர்களைப் பதிவு செய்ததாக MATRADE தெரிவித்தது.
இந்த வரவேற்பு, மலேசியாவின் ஹலால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் நிலவும் வர்த்தக ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
MATRADE – JAKIM இடையே முக்கிய ஒத்துழைப்பு!
இந்தக் கண்காட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, MATRADE மற்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM இடையே முக்கிய நோக்கக் கடிதம் (LOI) பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் Malaysia Halal Global Nexus (MyHGN) திட்டத்தின் கீழ் ஹலால் மேம்பாட்டு அதிகாரிகள் திட்டம் (Halal Development Officer Programme – HDO) உருவாக்கப்படவுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் பணியாற்றும் MATRADE அதிகாரிகள் மலேசியாவின் ஹலால் தொழில்துறை, சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து அனைத்துலக நிறுவனங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை மேற்கொள்வார்கள்.
மேலும், மலேசிய ஹலால் சான்றிதழ்களுக்கான அனைத்துலக அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் தலைமையில் முக்கிய நிகழ்வு!
இதனிடையே, MIHAS கண்காட்சியுடன் இணைந்து நடைபெற்ற Global Halal Summit (GHaS) எனப்படும் உலகளாவிய ஹலால் உச்சநிலை மாநாட்டை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மலேசியாவின் ஹலால் தொழில்துறையுடன் தொடர்புடைய பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
JAKIM ஏற்பாடு செய்த இந்த உச்சநிலை மாநாடு, உலகளாவிய ஹலால் தரநிலைகள், சான்றிதழ் அங்கீகாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முக்கியத் தளமாக அமைந்தது.
அரசாங்கச் சான்றிதழ் அமைப்புகள், இஸ்லாமிய அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனைத்துலகத் தொழில்துறைத் தலைவர்கள் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டது.
80 பெண் தொழில்முனைவோருக்குக் கண்காட்சி வாய்ப்பு!
MIHAS 2026 கண்காட்சி வர்த்தகச் சந்திப்புகளுடன் மட்டும் நின்றுவிடாமல், மலேசிய நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு அறிவுப் பகிர்வு மற்றும் வர்த்தக வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியிருந்தது. 
MATRADE ஏற்பாடு செய்த Knowledge Hub எனப்படும் அறிவுப் பகிர்வு நிகழ்ச்சியில் DHL Express Malaysia, UOB Malaysia மற்றும் Farm Fresh Malaysia ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, சந்தை வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அதேவேளையில், Women in Export (WiEX) திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர் நடத்தும் 80 கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றன.
பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை அனைத்துலக வர்த்தகர்களிடம் அறிமுகப்படுத்துவதற்கும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த முயற்சி வழிவகுத்தது.
மேலும், புதிய தயாரிப்புகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் அனைத்துலகச் சந்தை விரிவாக்கம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் MIHAS விருதுகளும் கண்காட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடம்பெற்றன.
RM35 பில்லியனுக்கும் அதிகமான ஏற்றுமதி விற்பனை!
2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MIHAS கண்காட்சி, மலேசியாவின் ஹலால் தொழில்துறையை அனைத்துலக அளவில் மேம்படுத்தும் முக்கிய வர்த்தகத் தளமாக வளர்ச்சியடைந்துள்ளது.
தொடங்கப்பட்டதிலிருந்து இந்தக் கண்காட்சி RM35 பில்லியனுக்கும் அதிகமான ஏற்றுமதி விற்பனையை உருவாக்கியுள்ளதுடன், உலகம் முழுவதிலுமிருந்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக MATRADE தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் பானங்கள், மருந்துப் பொருட்கள், இஸ்லாமிய நிதிச் சேவைகள், ஆடை அலங்காரம், தனிநபர் பராமரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் முஸ்லிம் சுற்றுலா உள்ளிட்ட 14 துறைகளை உள்ளடக்கிய MIHAS, மலேசிய நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
‘Shaping Trust, Driving Resilience’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற MIHAS 2026, உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தில் மலேசியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.






















