டாக்டர் சுப்பிரமணியத்தின் 10 ஆண்டுகால ஆய்வில் உருவான ‘The Wedding’ நூல்

இந்து கலாச்சாரத்தையும் பாரம்பரிய நடைமுறைகளையும் முறையாகப் பதிவு செய்து, குடும்பங்களுக்கும் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பயனுள்ள வகையில் வழங்கி வரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான சங்க ரத்னா டாக்டர் பா. சுப்பிரமணியம் AMN, தனது புதிய நூலான The Wedding மூலம் இந்து திருமணச் சடங்குகள் குறித்த விரிவான வழிகாட்டியை உருவாக்கியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் பா. சுப்பிரமணியம்  ஆங்கிலத்திலும் தமிழிலும்  எழுதிய  நீத்தா கடன் எனும் நூல், இந்து இறுதிச்சடங்கு நடைமுறைகள் தொடர்பான விரிவான குறிப்பாக அமைந்ததுடன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பங்களுக்கான ஒரு முக்கியமான மேற்கோள் நூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே பணியைத் தொடர்ந்து, இந்து திருமண நடைமுறைகள் குறித்து சுமார் 10 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு The Wedding என்ற புதிய நூலை அவர் உருவாக்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள The Wedding நூல், இந்து திருமணங்களில் காணப்படும் பல்வேறு நடைமுறைகள், குடும்பங்களின் பொறுப்புகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து தெளிவான புரிதலை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.திருமண நிகழ்வுகளைப் பதிவு செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், திருமணத்திற்கு முன், திருமணத்தின்போது மற்றும் திருமணத்திற்குப் பின்னர் குடும்பங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன, யார் எந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் நூல் விளக்குகிறது.

இந்து திருமண நடைமுறைகளில் குடும்பங்களுக்கு ஏற்படும் மாறுபட்ட கருத்துகள், எதிர்பார்ப்புகள் மற்றும் விளக்கங்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்த்து, தேவையான தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.நீண்டகால ஆய்வு, தகவல்களின் குறுக்கு சரிபார்ப்பு மற்றும் பல்வேறு நடைமுறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Neethar Kadan – Hindu Rites of Passage: The Funeral நூல் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு குறிப்புநூலாகப் பயன்பட்டு வருவது போன்று, The Wedding நூலும் எதிர்கால தலைமுறைகளுக்கு பயனளிக்கும் நிலையான வழிகாட்டி நூலாக அமைய வேண்டும் என்பதே டாக்டர் பா. சுப்பிரமணியத்தின் நோக்கமாகும்.

The Wedding நூல் வரும்  27.9.26 ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணிக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில்  வெளியீடு காணவுள்ளது.  புக்கிட் ரோத்தான் ஶ்ரீ சக்தி தேவஸ்தானத்தின் தலைவர்  சிவஶ்ரீ முத்துகுமார சிவாச்சாரியார்  அவர்கள் இந்நூலை வெளியீடு செய்யவிருக்கிறார். அனைவரும் திரண்டு வந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here