கோலாலம்பூர்:
கம்பாரிலுள்ள ஜாலான் துரோனோ மைன்ஸ், காம்போங் ஆயிர் ஹித்தாம் பகுதியில் இன்று காலை 9.54 மணியளவில் டொயோட்டா வயோஸ் மற்றும் பெரோடுவா பெஸா ஆகிய இரு கார்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இரு முதியவர்கள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறுகையில், டொயோட்டா வயோஸ் காரில் பயணித்த 31 முதல் 62 வயதுக்குட்பட்ட மூவர் லேசான காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவித்தார்.
“டொயோட்டா வயோஸ் காரை ஓட்டிச் சென்ற 31 வயதுப் பெண் ஓட்டுநரின் கால்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதுடன், அவருக்கு நெஞ்சுப் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அதேவேளையில், அதே காரில் பயணித்த 62 வயது முதியவர் இடிபாடுகளில் சிக்காவிட்டாலும், காரின் கதவு சேதமடைந்ததால் வெளியேற முடியாமல் தவித்தார்” என்று, பேராக் JBPM உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.
அதே காரில் பயணித்த மற்றொரு 62 வயது மூத்த பெண்மணி, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்னரே சுகாதார அமைச்சின் (KKM) ஆம்புலன்ஸ் மூலம் மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேவேளையில், பெரோடுவா பெஸா காரை ஓட்டிச் சென்ற 21 வயது இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். அவர் மலேசியப் சிவில் பாதுகாப்புப் படையின் (APM) ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
















