ஈப்போவில் இரு கார்கள் மீது விழுந்த இராட்சத மரம்; 6 பேர் காயமின்றித் தப்பினர்!

ஈப்போ:

இங்குள்ள ஸ்டேஷன் 18 அருகே ஜாலான் சிம்பாங் பூலை – லஹாட் சாலையில் சென்றுகொண்டிருந்த இரு கார்கள் மீது இராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்த விபத்தில், காரிலிருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றித் தப்பினர்.

இன்று மாலை 4.26 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமட் தெரிவித்துள்ளார்.

“இச்சம்பவத்தில் ‘பெரோடுவா பெஸா’ மற்றும் ‘பெரோடுவா அல்ஸா’ ஆகிய இரு கார்கள் சிக்கின. தகவறிந்த 3 நிமிடங்களில் பசீர் பூத்தே தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் இருந்த 6 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, காயங்களின்றித் தப்பியதாக அவர் சொன்னார்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு காரில் இருந்தவர்களை வெளியேற உதவியுள்ளனர்.

இச்சம்பவத்தில் LFRT மற்றும் EMRS ஆகிய இரு மீட்பு வாகனங்களுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்த இராட்சத மரத்தைச் சங்கிலி அறுவை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றிப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here