சிரம்பான்:
நெகிரி செம்பிலான், கோலாபிலாவில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் இரண்டாம் படிவ மாணவர் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 16 வயது மூத்த மாணவனின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முழுமையாக நிறைவு செய்வதற்காகக் கோலாபிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடுப்புக் காவல் நீட்டிப்பு உத்தரவை அடுத்து, இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.
“சந்தேகநபரின் முதல்கட்டத் தடுப்புக் காவல் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கியது. தற்போது புலனாய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் (கொலை வழக்கு) கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” டத்தோ அல்சாஃப்னி அகமட் கூறினார்.
இக்கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாம் படிவ மாணவர், ரப்பர் குழாயால் கால்களில் கடுமையாகத் தாக்கப்பட்டும், உடலின் பிற பகுதிகளில் சரமாரியாகப் பலத்த அடிகளை வாங்கியும் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவர் துவாங்கு அம்பான் நஜிஹா (HTAN) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கைதாகியுள்ள மற்றொரு 16 வயது மாணவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்புக் காவல் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுதிகளில் அரங்கேறும் இதுபோன்ற கொடூர பகடிவதை சம்பவங்கள் மலேசியப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

















